மேற்காசிய நாடுகளில் ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், தெலங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக இன்று (மார்ச் 30, 2026) காலை ஒரு தவறான தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், நகரின் அனைத்துப் பெட்ரோல் பங்க்குகளிலும் ஒரே நேரத்தில் படையெடுத்தனர். இதனால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நின்றதால், ஐதராபாத்தின் முக்கியச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் பெட்ரோல் வாங்குவதில் மக்களிடையே வாக்குவாதங்களும், மோதல்களும் வெடித்தன.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தெலங்கானா அரசு உடனடியாக இதற்கு விளக்கம் அளித்துள்ளது. “மாநிலத்தில் போதுமான அளவு எரிபொருள் இருப்பு உள்ளது. விநியோகச் சங்கிலியில் (Supply Chain) எந்தப் பாதிப்பும் இல்லை. வதந்திகளை நம்பி மக்கள் தேவையற்ற பீதியில் பெட்ரோல் பங்குகளில் குவிய வேண்டாம்” எனத் தெலங்கானா போக்குவரத்துத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேலும், அவசரத் தேவைக்காக மக்கள் அதிகப்படியாக எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் என்றும், வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஏற்கனவே மாநில முதல்வர்களுடன் எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இந்தியாவிற்குத் தேவையான எண்ணெய் கையிருப்பு அடுத்த சில மாதங்களுக்குப் போதுமானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், போர்ச் சூழலைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் பரப்பும் இதுபோன்ற வதந்திகள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.


