ஐதராபாத்தின் மிக முக்கியமான மற்றும் சொகுசுப் பகுதியான பஞ்சாரா ஹில்ஸில் (Banjara Hills) இன்று (மார்ச் 31, 2026) அதிகாலை ஒரு அதிரடி சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், யாரும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து சிலிண்டர் குவியலைக் கண்டுபிடித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு கல்லறையில் (Graveyard) மறைவான இடத்தில் மலைபோலக் குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 414 எரிவாயு சிலிண்டர்களை ஐதராபாத் மண்டலக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.21.88 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உள்ளூர் எரிவாயு முகமையில் (Gas Agency) பணியாற்றி வந்த முகமது ஆமிர் என்பவர் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேற்காசியப் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தியைப் பயன்படுத்தி, சிலிண்டர்களைக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க அவர் திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது. இதற்காக யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கல்லறையைப் பதுங்குமிடமாக அவர் பயன்படுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வரும் சூழலில், இந்தச் சிலிண்டர் பதுக்கல் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“மக்கள் பீதியில் இருக்கும்போது இது போன்ற கள்ளச்சந்தை கும்பல்கள் லாபம் சம்பாதிக்க முயல்கின்றனர்; அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஐதராபாத் காவல்துறை எச்சரித்துள்ளது. 414 சிலிண்டர்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், முகமது ஆமிரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.


