இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, தனது பிரபலமான ‘வென்யூ’ (Venue) மாடல் கார் ஒரு லட்சம் முன்பதிவுகளைக் கடந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியைத் தனது வாடிக்கையாளர்களுடன் கொண்டாடும் விதமாக, ஹூண்டாய் நிறுவனம் வென்யூ வரிசையில் புதிய HX8 டீசல் ஆட்டோமேட்டிக் (AT) வேரியண்ட்டை இன்று அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய வேரியண்ட் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.13,69,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை டாப் எண்ட் மாடல்களில் மட்டுமே கிடைத்து வந்த டீசல் ஆட்டோமேட்டிக் வசதியை, இப்போது இன்னும் சற்றே குறைவான விலையில் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள HX8 வேரியண்ட்டில் 1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 116 HP பவரையும், 250 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதனுடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
வசதிகளைப் பொறுத்தவரை, இதில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 4-வே எலக்ட்ரிக் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற பிரீமியம் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஹில் அசிஸ்ட் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. டாப் எண்ட் மாடலான HX10-ஐ விடச் சுமார் 1.81 லட்சம் ரூபாய் குறைவாக இந்த மாடல் கிடைப்பதால், டீசல் ஆட்டோமேட்டிக் காரைத் தேடும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


