பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், சுயமாக தொழில் செய்து பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்காகவும் தமிழக அரசு கிரைண்டர் மானியத் திட்டம் (Wet and Dry Grinder Subsidy Scheme) என்ற பிரத்யேக மானிய திட்டத்தை தற்போது அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பிப்போரும் 25 வயதிற்கு மேற்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இந்த ரூ.5000 மானியமானது பின்தங்கிய பிரிவினரான ஆதரவற்றோர், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களுக்கு கிடைக்கும். கிரைண்டர் மானியம் பெற விரும்பும் பெண்கள், அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்று (வட்டாட்சியரிடம் பெற வேண்டும்) கைம்பெண்கள் அல்லது ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடம் பெற வேண்டும். கிரைண்டர் மானியத்திற்கு விண்ணப்பித்த பிறகு, தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவார்கள். ஆனால், இது தொடர்பாக மாநில அரசு அறிவிப்பு வெளியான பிறகுதான், கிரைண்டர் மானியத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.அரசின் இந்த அறிவிப்பானது, பெண்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.