மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா (9 ரன்கள்) வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் சீக்கிரம் அவுட்டானாலும், அடுத்து வந்த சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
குறிப்பாக, சஞ்சு சாம்சன் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஓவர்களில் சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். பவர்ப்ளே முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது. சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 41 ரன்களுடனும், இஷான் கிஷன் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வான்கடே ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், இந்தியா 200 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, மார்ச் 8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் மோதும்.


