இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவரும் சக பேட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பிடமிருந்து பிரிவதாக அறிவித்துள்ளார். 7 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் பரவி, விளையாட்டு உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) இரவு சாய்னா நேவால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், “வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. பல சிந்தனைகள் மற்றும் பரிசீலனைகளுக்குப் பிறகு, நானும் பருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களுக்கும், ஒருவருக்கொருவருக்கும் அமைதி, வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை நாங்கள் தேர்வு செய்கிறோம். நினைவுகளுக்கு நான் நன்றியுள்ளவள், மேலும் முன்னோக்கிச் செல்ல சிறந்ததை விரும்புகிறேன்.
இந்த நேரத்தில் எங்கள் தனிப்பட்ட விஷயத்தைப் புரிந்து கொண்டு மதித்ததற்கு நன்றி,” என்று குறிப்பிட்டிருந்தார்.
சாய்னா நேவால் (35) உலகின் நம்பர் 1 பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம், உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். 2023-ஆம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்திருந்தார்.
பருபள்ளி காஷ்யப் (38) 2014 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவர். இருவருமே ஐதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். நீண்ட நாள் காதலர்களாக இருந்த இவர்களுக்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒன்றாகப் பயிற்சி செய்வது, ஒருவரையொருவர் போட்டிகளில் ஆதரிப்பது என ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒரு ஜோடியாகத் திகழ்ந்தனர்.
இந்த அறிவிப்பு குறித்து பருபள்ளி காஷ்யப் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால், சாய்னாவின் அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





