மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகத் தீவிரப் போர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 18, 2026) அதிகாலை சுமார் 3:48 மணியளவில் (உள்ளூர் நேரம் காலை 9:15), ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ‘அல் மின்ஹாத்’ (Al Minhad) விமானப்படைத் தளம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தளத்தில்தான் ஆஸ்திரேலியாவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ராணுவத் தலைமையகம் (HQME) மற்றும் சுமார் 80 ஆஸ்திரேலிய வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், “ஈரான் ஏவிய ஏவுகணை ஒன்று அல் மின்ஹாத் தளத்திற்குச் செல்லும் சாலையின் அருகே விழுந்து வெடித்தது. இதில் ஏற்பட்ட சிறு தீ விபத்தினால் வீரர்களின் தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதி கொண்ட ஒரு கட்டடத்திற்குச் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், இந்தத் தாக்குதலில் ஆஸ்திரேலிய வீரர்கள் யாருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை; அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
“ஈரான் தற்போது அந்தப் பிராந்தியம் முழுவதும் தன்னிச்சையானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும், ஆஸ்திரேலியா ஈரானுடன் போரில் ஈடுபடவில்லை” என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். வளைகுடா நாடுகளில் நிலவும் இந்தப் போர்ச் சூழல் காரணமாக, ஏற்கனவே அமீரக வான்வெளி அவ்வப்போது மூடப்பட்டு வரும் நிலையில், இன்று துபாய் மற்றும் அபுதாபி பகுதிகளில் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் ஆக்ரோஷமாகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல் நேரடியாக ஆஸ்திரேலியாவை இலக்கு வைத்ததா அல்லது அருகில் உள்ள அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்துத் தவறி விழுந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


