அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் சூழலில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
“ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒருபோதும் ஏற்க மாட்டார். இதற்காகவே ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) மிகத்துல்லியமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் ஈரானின் முக்கிய ராணுவக் கட்டமைப்புகள் நிலைகுலைந்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் பேசிய அவர், “ஈரான் மீதான இந்தத் தாக்குதல் மிகத்துல்லியமாக நடந்து வருகிறது; பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ராணுவ இலக்குகள் மட்டுமே தகர்க்கப்படுகின்றன. ஈரானின் ஆயுதக்கிடங்குகள் தற்போது தீர்ந்து விட்டன, இனி அவர்களால் பெரிய அளவிலான எதிர் தாக்குதல்களை நடத்த முடியாது” என்று பீட் ஹெக்செத் கூறியுள்ளார். ஈரானின் கடற்படைத் தளங்கள் மற்றும் அணுசக்தி ஆய்வு மையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு அரணையும் உடைத்துள்ளதாக அமெரிக்கா கருதுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி நகர்வு, வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. இருப்பினும், ஈரானின் பதிலடி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. ஆயுதங்கள் தீர்ந்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ஈரான் சரணடையுமா அல்லது மறைமுகப் போரைத் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


