இந்தியப் பெருங்கடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை எல்லைக்கு மிக அருகில் ஈரானியக் கப்பல் ஒன்று நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல்: இலங்கை கடல் எல்லைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த ஈரானியக் கப்பலை இலக்கு வைத்து, அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் ஒன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணை அல்லது டார்பிடோ (Torpedo) மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு உள்ளான கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
101 பேர் மாயம் – 78 பேர் காயம்: இந்தக் கோரத் தாக்குதலில் கப்பலில் இருந்த 101 பேர் மாயமாகியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த நிலையில் 78 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களைத் தேடும் பணியில் இலங்கை கடற்படை மற்றும் சர்வதேச மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
யார் பின்னணியில்? இந்தத் தாக்குதலுக்கு எந்த நாடும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானியக் கப்பல் மீதான இந்தத் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது திட்டமிடப்பட்ட ராணுவத் தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துச் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.


