மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடிப் போர் அபாயம் தற்போது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை முடக்க அந்நாட்டின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் (Power Plants) மற்றும் எரிசக்தி மையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் ஈரான் அரசு தற்போது ஒரு மெகா எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. “அமெரிக்கா எங்களது உள்நாட்டு உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால், உலக நாடுகளின் எரிசக்தி நரம்பான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியே செல்ல முடியாதபடி முழுமையாக மூடப்படும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 முதல் 25 சதவீதம் இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. இந்தப் பாதை மூடப்பட்டால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 200 டாலருக்கும் மேல் எகிறும் அபாயம் உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா தனது போர்க்கப்பல்களையும், ஏ-10 ரகத் தாக்குதல் விமானங்களையும் ஹார்முஸ் பகுதிக்கு அனுப்பி வரும் நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானின் மின் கட்டமைப்பு தகர்க்கப்பட்டால், அதற்குப் பதிலடியாக ஹார்முஸ் பகுதியில் உள்ள அனைத்து சர்வதேசக் கப்பல்களையும் சிறைபிடிப்போம் அல்லது மூழ்குடிப்போம் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. இதனால் இந்தியா உட்படக் கச்சா எண்ணெயை நம்பியிருக்கும் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வல்லரசு நாடுகளின் இந்த நேரடி மோதல், ஒருவேளை மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது.


