சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான தமிழ் ஆசிரியர் சுதாகர், 16 வயது மாணவனை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி அந்த மாணவரின் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர். மாணவனின் உடல்நிலை மோசமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆசனவாயில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டபோது தான் பெற்றோருக்கு உண்மை தெரியவந்தது. கடந்த 2023ம் ஆண்டு முதல் ஆசிரியரால் தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இதனால் மாணவன் உடல்நிலை மற்றும் மனநிலை இரண்டிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார் எனவும் மாணவரின் பெற்றோர்கள் கூறியுள்ளார். பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்த போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காவல்துறையில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காத நிலையில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில், கமுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஹாஸ்டல் வார்டன் ஒரு மாணவனை பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவனின் தாய், காவல் நிலையத்தில் அழுது கொண்டே புகார் அளித்துள்ளார். மேலும் மும்பையில் இடம்பெற்ற சம்பவத்தில், ஒரு தனியார் பள்ளி ஆசிரியை தானே வந்து தனது 11ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்தார். இந்த ஆசிரியை மாணவனை மூளைச்சலவை செய்து, மன அழுத்த மாத்திரைகள் கொடுத்து, மது அருந்த வைத்ததுடன், பலவசதியுள்ள ஹோட்டல்களில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இந்தக் கொடுமைகள் குழந்தைகளின் உடல்நலத்தையும், மனநலத்தையும் தீவிரமாக பாதிக்கின்றன. சிறுமிகளைப் போலவே சிறுவர்களும் பாதுகாப்பற்ற சூழலில் வாழவேண்டிய நிலை உருவாகியுள்ளது. போக்சோ சட்டம் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இயற்றப்பட்டாலும், அவற்றின் நடைமுறை அமல்படுத்தலில் பலவீனங்கள் காணப்படுகின்றன. கல்வி வழங்கும் ஆசிரியர்களே இது போன்ற வன்முறைகளை அரங்கேறுவது சமூக நம்பிக்கையை சிதைக்கிறது. இதற்குத் தீர்வாக போக்சோ சட்டத்தை மேலும் கடுமையாக்கி, மாணவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தான் தற்போதைய அவசியமாக உள்ளது.