சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற வதந்தி பரவியதால், பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். நேற்று நள்ளிரவு வரை பல இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இன்று காலையிலும் அதே நிலை தொடர்ந்ததால் பல பெட்ரோல் நிலையங்களில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
வழக்கமாக 100 ரூபாய், 200 ரூபாய் அளவில் எரிபொருள் நிரப்பும் பலரும் இந்த முறை முழு டேங்க் நிரப்பிச் சென்றனர். சிலர் கூடுதல் முன்னெச்சரிக்கையாக கேன்கள் மற்றும் குடங்களிலும் பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்றனர். எரிபொருள் கிடைக்காமல் போகும் என்ற அச்சம் காரணமாகவே முன்கூட்டியே சேமித்து வைக்க முயன்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் – ஈரான் போர் சூழ்நிலை காரணமாக கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்களிலும் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் தட்டுப்பாடு வரலாம் என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 7000 பெட்ரோல் நிலையங்களில் 21 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து விநியோகம் தடையின்றி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாநில தலைவர் முரளி கூறுகையில், பொதுமக்கள் பயத்தில் அதிக அளவில் வாங்கிச் செல்வதால்தான் சில இடங்களில் செயற்கையான தட்டுப்பாடு தோன்றுகிறது என்றார். இந்தியா முழுவதும் 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளதாக மத்திய அரசும் உறுதி செய்துள்ளதால், மக்கள் வதந்திகளை நம்பாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


