தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் தனது 51வது பிறந்த நாளை நேற்று ரசிகர்களுடன் கொண்டாடினார். இந்த சிறப்பு நாளில் அவருக்கு பலர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துப் பதிவுகளை பகிர்ந்தனர். இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்பெஷல் பதிவை பகிர்ந்தார். அந்தப் புகைப்படத்தில், விஜயுடன் சோஃபாவில் அமர்ந்திருக்கும் திரிஷா, தனது செல்ல நாய்க்குட்டி இஸ்ஸியுடன் சேர்ந்து இருப்பது போலக் காணப்படுகிறது. அந்த நாயைக் கையில் தூக்கி கொஞ்சும் விஜயின் மென்மையான முகபாவனை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படத்துடன் “Happy Birthday Bestest” என பதிவு செய்திருந்த திரிஷாவின் பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. த்ரிஷா, இஸ்ஸியை தனது குழந்தையைப் போல வளர்த்து வருவதாகக் கூறி வருகிறார்.
மேலும், அந்த நாய்க்காக தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கமும் வைத்துள்ளார். இஸ்ஸியின் “அம்மா” என தன்னை அடையாளப்படுத்தும் அவரின் பதிவு, விஜய்யுடன் உள்ள நெருக்கத்தையும் ரசிகர்கள் மீண்டும் பேசத் தொடங்க வைத்துள்ளது. இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து த்ரிஷா லிஃப்ட்-இல் எடுத்த செல்ஃபி ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் ஒரு சொகுசு கப்பலில் எடுக்கப்பட்டதென நெட்டிசன்கள் கூறி, காதல் வதந்திகளை கிளப்பினர். யூடியூப் சேனல்களிலும் இது தொடர்பாக பலர் கருத்து வெளியிட்டு விவாதங்களை உருவாக்கினர். அதே நேரத்தில், த்ரிஷா மற்றும் விஜய் கடந்த இருபது ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருப்பதும் உண்மை. கில்லி, குருவி, லியோ, உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்த இவர்கள், திரையில் தோன்றும் கெமிஸ்ட்ரியால் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளனர். விஜய் பிறந்தநாளுக்கு அவரது மனைவி சங்கீதா கடந்த சில ஆண்டுகளாக தோன்றவில்லை என்பதற்கும், விஜய்-த்ரிஷா தொடர்பான வதந்திகளும் தொடர்புடையதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், த்ரிஷாவும் விஜய்யும் தொடர்ந்து நட்பாகவே பழகி வருகிறார்கள் என்பது விஜய் ரசிகர்களின் வலியுறுத்தல்.