லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூத் மீது இஸ்ரேல் ராணுவம் மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு பெய்ரூத் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளைத் தாக்கப்போவதாக இஸ்ரேல் ராணுவத்தின் அரபு மொழிச் செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அத்ராயீ (Avichay Adraee) தனது எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
“உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினரின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தெற்கு பெய்ரூத் பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டளை மையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் மக்கள் இருக்க வேண்டாம் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பெய்ரூத் நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே இஸ்ரேல் – ஹமாஸ் போர் நீடித்து வரும் நிலையில், இப்போது ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் ஒரு பெரிய போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.


