திருமணம் செய்வதாகக் கூறி நம்பிக்கை அளித்து, மயக்க மருந்து கலந்த குளிர்பானதைக் கொடுத்து இளம்பெணிடம் தவறாக நடந்துகொண்ட ஐ.டி. ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகர் காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குள் வசிக்கும் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், “நான் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஜித் (31) என்கிற நபர், என்னிடம் ஆசை வார்தைகள் பேசி, திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன் மூலம் நெருக்கமான உறவு ஏற்பட்டது. தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தோம். அவர் திருமணம் செய்யத் தயாராக இருப்பதாகவும், வீட்டார் அனுமதியுடன் வரவேண்டுமெனவும் கூறினார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு முன்பு, அஜித் ஒரு சந்திப்பின் போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அந்த நிலையில் தனது விருப்பப்படி நடந்துகொண்டு, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார். அதனை அழிக்குமாறு கேட்டபோதும், அவர் மறுத்துவிட்டதாகவும், தொடர்ந்து அந்த வீடியோவை காட்டி மிரட்டலும், தொந்தரவும் செய்து வந்துள்ளதாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தாமதமாக தான் அறிந்ததாகவும், அந்த உண்மை தெரிந்ததும் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கம் கூட இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நிலைக்கு மேல் தற்கொலை செய்து கொள்ள சென்று விட்டேன். எனவே, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அந்தப் பெண் மிகுந்த மனவலியோடு புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அஜித் தனது முதல் திருமணத்தை மறைத்தது, மயக்க மருந்து கொடுத்தது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டியது ஆகியவை உண்மை என உறுதி செய்யப்பட்டன. பின்னர், அவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரது பிணையை மறுக்க, அஜித் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.