நவி மும்பையின் கார்குல் பகுதியில், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 55 வயதான அனுப் குமார் நாயர் என்ற ஐடி ஊழியர் ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளாக முழுமையான தனிமையில், தனது வீட்டை பூட்டியவாறே வாழ்ந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. அவரது வாழ்க்கை முறையில், வெளி உலகத்துடன் எந்தவொரு தொடர்பும் இல்லாமல், ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து, உணவை வாங்குவதற்கு மட்டுமே கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார். வீட்டு குப்பைகளைக் கூட வெளியே கொட்டுவதில்லை. பக்கத்து வீட்டினரின் பலமுறை வற்புறுத்தலுக்குப் பிறகே அவ்வப்போது வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல், அன்பின் சுவிஷேச சங்கம் என்ற அமைப்பின் தன்னார்வலரிடம் வந்தது. அவர்களின் உதவியுடன் அனுப் குமார் மீட்கப்பட்டார். அந்த வேளையில், அவர் பல நாட்களாக முடி மற்றும் தாடி வெட்டாத நிலையில், உடல் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும், அவரது கால்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும், உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதாகவும் அந்த அமைப்பின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அனுப் குமாரின் தாய் பொன்னம்மா நாயர், இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். அவரது தந்தை குட்டி கிருஷ்ணன் நாயர், டாடா மருத்துவமனையில் பணிபுரிந்தவர். இருவரும் கடந்த சில ஆண்டுகளில் இறந்துவிட்டதால், அனுப் குமார் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி , தனிமையில் மூழ்கியுள்ளார். பெற்றோர் இறந்ததையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தனர். ஆனால், அனுப் அவர்கள் யாருக்கும் பதிலளிக்கவில்லை. இதனால், அவர் மற்றவர்களிடம் நம்பிக்கையை இழந்தவராகவும், முழுமையான தனிமையில் வாழ்ந்தவராகவும் இருந்து வந்துள்ளார். அனுப் குமார் தற்போது, அன்பின் சுவிஷேச சங்கம் சார்பில் பாதுகாப்புடன் ஒரு ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், தொழில்நுட்பத் துறையில் செயல்படும் பலருக்கு மனநலம் மற்றும் சமூக உறவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறது. தனிமை, மன அழுத்தம், நம்பிக்கையிழப்பு போன்ற காரணிகள் எப்படி ஒரு நபரை முற்றிலும் சமூகத்திலிருந்து பிரிக்கின்றன என்பதை இந்த உண்மை சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது.