ஜனநாயகன் புதிய அப்டேட்!! எப்போது திரைப்படம் வெளியாகும்??

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜன நாயகன் திரைப்படம், எதிர்பாராத தடைகள் காரணமாக வெளியீட்டில் பெரிய பின்னடைவை சந்தித்தது. ஆரம்பத்தில் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம், கடைசி நேரத்தில் தணிக்கை சிக்கலில் சிக்கி நிறுத்தப்பட்டது.

படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்தது. இதனால் படம் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமும் உருவானது. தொடர்ந்து இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றது. விசாரணையின் போது, படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் தணிக்கை வாரியம் கூறிய பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, சில முக்கியமான காட்சிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. தற்போது மறுதணிக்கைக்கான பதிப்பை மத்திய தணிக்கை வாரியம் பார்வையிட்டுள்ளதாகவும், விரைவில் சான்றிதழ் கிடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தற்போதைய தேர்தல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, படம் வெளியீட்டை அரசியல் பரபரப்பு குறையும் வரை தள்ளி வைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், ஏப்ரல் மாத இறுதியில் ஜன நாயகன், திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான தாமதங்களால் வணிக ரீதியாக சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், புதிய மாற்றங்களுடன் படம் வெளியாகும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

பல தடைகளை கடந்த ஜன நாயகன், இறுதியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது தான் இப்போது பெரிய கேள்வியாக உள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram