திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவனம் வளாகத்தில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியின் மாணவிகளுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகியுள்ளது. இந்த வளாகக் கல்லூரியில் படித்துள்ள 10 மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.18 லட்சம் ஊதியத்தில் ஜப்பானில் பணியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இக்கல்லூரியின் வேலைவாய்ப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் ஆர். திருநீலகண்டன், என். சித்ரா மற்றும் ஏ. வளர்மதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மாணவ மாணவிகளுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான வளாக நேர்காணல் வாயிலாக எம்சிஏ படித்த மாணவிகள் எஸ். பூஜா, சி. கவிப்பிரியா, எஸ். மொசி, எஸ். சினேகா, பி.இ. கணினி அறிவியல் படித்த கே. நற்சோனை, பிரியங்காஸ்ரீ, பிரியதர்ஷினி மற்றும் பி.டெக். தகவல் தொழில்நுட்பம் படித்த எஸ். டெல்சி ஏஞ்சல், வி. கோபிகா, என். ஜெயபாரதி ஆகியோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், தேர்வான மாணவிகளுக்கு பணி நியமனக் கடிதங்களை பல்கலை முதன்மையர் டி. செந்தில்குமார் வழங்கி, அவர்களை வாழ்த்தினார். இந்த வாய்ப்பை வழங்கிய ஜப்பான் ஐ.டி நிறுவனம், இந்திய மாணவிகள் திறமையை பாராட்டி அவர்களை தேர்வு செய்துள்ளது. மாணவிகள் அக்டோபர் மாதம் ஜப்பான் செல்லவுள்ளார்கள். “இந்த சாதனை, எங்கள் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் திறமைக்கும், வேலைவாய்ப்புப் பிரிவு மற்றும் ஆலோசனை குழுவின் ஊக்குவிப்புக்கும் எடுத்துக்காட்டு. இந்த வாய்ப்பை உருவாக்கிய முக்கிய பங்குதாரர்கள் – ஐஏஎஸ் அதிகாரிகள் சி. சமயமூர்த்தி, திவ்யா, பேராசிரியர் எஸ். உஷா, பதிவாளர் ஜே. பிரகாஷ், இயக்குநர் பி. ஹரிஹரன் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மைய இயக்குநர் கே. சண்முகசுந்தரம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என டீன் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.