மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் உருவான காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் திமுக சார்பில் பி. வில்சன், கவிஞர் சல்மா மற்றும் சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால் மற்றும் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோரும் இடம் பிடித்தனர். முக்கியமாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் ஜூலை 25-ம் தேதி பதவியேற்க உள்ளார். அரசியல் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள கமல்ஹாசன், இந்த மகிழ்ச்சியைக் தனது நண்பரான ரஜினிகாந்துடன் பகிர்ந்து கொண்டார்.
கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் சான்றிதழை கையில் வைத்துக்கொண்டு, நேரில் ரஜினிகாந்தை சந்தித்து அந்த சிறப்பான தருணத்தை பகிர்ந்தார். இரண்டு தத்துவங்களை கொண்ட நடிகர்கள், தற்போது அரசியல் அரங்கிலும் முக்கிய பாத்திரம் வகிக்கின்றனர் என்பது இந்த சந்திப்பின் மூலம் தெரிய வருகிறது. “புதிய பயணத்தை நண்பர் ரஜினியுடன் பகிர்ந்தேன், மகிழ்ந்தேன்” என தனது உணர்வை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன். கமலும் ரஜினியும் நீண்ட கால நண்பர்கள். தற்போது கமல், தனது அரசியல் வெற்றியை அவரது நடிப்புத் துறையின் தோழருடன் பகிர்ந்திருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிப்பில் தொடங்கிய பயணம், தற்போது நாடாளுமன்ற அரங்கத்தில் தொடரவிருப்பது கமல்ஹாசனுக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகும். அவரது அரசியல் பாதையில் இது ஒரு புதிய அத்தியாயமாக திகழ்கிறது.