கரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த அரசியல் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் கவலை எழுப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த இரண்டு இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கரூரின் வேலுச்சாமிபுரத்தில், விஜய் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய் உரையாற்றியபின் கூட்ட நெரிசல் மேலும் தீவிரமடைந்து, பலர் மயக்கமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வந்திருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர் என்பதால், உயிரிழப்பின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்து உள்ளனர் சம்பவத்தின் முழு நிலையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
கரூரில் நடந்த துயரம் மிகவும் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அருகிலுள்ள திருச்சி மாவட்டத்திலிருந்து தேவையான உதவியினை செய்யவும் உத்தரவிட்டுள்ளேன் எனக் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:
தமிழ்நாட்டின் கரூரில் அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என தன் இரங்கலை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.


