தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், ஜூலை 16 கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து, தமிழக மக்களின் மனதில் இன்னும் மறையாத ஒரு கருப்பு சின்னமாகவே உள்ளது. அந்த ஒரு துயர நாள் காலை புத்தகப்பையை தங்களின் சின்னத் தோள்களில் சுமந்து சிரித்துக் கொண்டே பள்ளிக்குச் சென்ற 94 குழந்தைகள், கருகிய உடல்களாக மீட்கப்பட்டனர். மேலும் 18 குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
அந்தக் கோர சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 21 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று, அந்த 94 பிள்ளைகளின் உயிரிழப்பை நினைவுகூரும் நிகழ்வு பள்ளி முன் ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் பிளக்ஸாக வைக்கப்பட்டன. பெற்றோர் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பிள்ளைகளுக்கு பிடித்த பழங்கள், பிஸ்கட், கூல்டிரிங்க்ஸ், பேனா போன்ற பொருட்களும் அங்கு வைக்கப்பட்டன.
அங்கு வந்த பெற்றோர்கள் தங்களின் மன வலியை தவிக்க தவிக்க வெளிப்படுத்தினர். “என் பிள்ளை இருந்திருந்தால் இப்போது வேலை பார்த்துக் கொண்டிருப்பான், கல்யாணம் செய்து வைத்திருப்போம். ஆனால் அந்த தீ எங்களை வாழவே விட்டது இல்லை,” என்று ஒருவரும்,
“நடந்தது கனவாக இருந்திருக்க கூடாதா? எங்கய்யா இருக்க, எங்களிடம் திரும்ப வந்துரைய்யா…” என்று மற்றொரு தாயும் கண்களில் கண்ணீர் விட்டு கதறினார். நேற்று நடைபெற்ற நினைவு நிகழ்வில் அமைச்சர் கோவி. செழியன், எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
“எங்கள் பிள்ளைகளுக்கு நடந்தது, யாருக்கும் நடக்கக் கூடாது. எல்லோரும் தங்களின் பிள்ளைகளை பாதுகாப்பாக, எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்ற வலியுறுத்தலுடன், பெற்றோர் மற்றும் பொதுமக்கள், “அந்த தீ விபத்து நாளை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும். அந்த நாளில் தமிழகமெங்கும் பள்ளிகளில் நினைவு நிகழ்வு நடத்த வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கையை மீண்டும் முன்வைத்தனர். ஆனால் இதுவரை அரசின் மூலம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.