சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கிங்டம்’ திரைப்படத்தை திரையிட, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘கிங்டம்’ திரைப்படம், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றைத் தவறாகச் சித்தரிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, ‘கிங்டம்’ படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அச்சமடைந்தனர். இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “திரைப்படத்தை திரையிட விடாமல் தடுப்போம் என நாம் தமிழர் கட்சியினர் அச்சுறுத்துகின்றனர். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். “சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது காவல்துறையின் கடமை. எனவே, திரையரங்குகளில் நடைபெறும் திரைப்படத் திரையிடலுக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படாத வகையில், உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் மூலம், தமிழகத்தில் ‘கிங்டம்’ திரைப்படம் எந்தவித இடையூறும் இன்றி திரையிடப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், திரைப்படத்தின் மீதான அரசியல் கருத்துக்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.