தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பாறையூர் பகுதியில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தினருடன் கேரளாவிலிருந்து பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
இன்று காலை 7 மணியளவில், தருமபுரி அருகே ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரின் டிரைவர் கவனக் குறைவால் அவர் ஓட்டிசென்ற கார் முன்னே சென்ற லாரியின் பின்புறத்தில் மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்புறம் நொருங்கி சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற பயணிகள், அதாவது நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அவரது தாய் மரியா கார்மெல், சகோதரர் ஜோ ஜான் சாக்கோ மற்றும் காரின் டிரைவர் அனீஸ் ஆகியோர் படுகாயமடைந்து, உடனே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து மலையாள திரையுலகத்திலும், ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் சில சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் இருந்தார். தற்போது அவர் மீண்டும் படுகாயமடைந்த நிலையில் உள்ளார் என்பது அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் கவலை அளிக்கிறது.
விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. போலீசார் லாரி டிரைவர் மற்றும் கார் டிரைவரை விசாரித்து வருகின்றனர். மேலும், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.