ராஞ்சி: ஜார்கண்ட் என்கவுண்டரின் போது மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா,மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கங்கள் அதிகமாக உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தின் கோயில்கேரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சவுதாப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாக மத்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ரகசிய தகவலின் படி மாநில போலீசாருடன் சேர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் அவர்களை தேடும் வேட்டையில் இறங்கினர். தேடுதல் நடத்தியபோது பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுகளுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுக்கும் வகையில் இருதரப்பினருக்கும் துப்பாக்கி சூடு மோதல் ஏற்பட்டது.
அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதும் மற்றவர்கள் தப்பித்தனர். தேடுதல் வேட்டை நடந்த இடத்தில் சில மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகத்தை தொடர்ந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருகின்றனர் பாதுகாப்பு படையினர்.