ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), தனது வரலாற்றிலேயே மிகப்பாரிய பணிநீக்க நடவடிக்கையை மீண்டும் ஒருமுறை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த 2025 டிசம்பர் நிலவரப்படி, மெட்டா நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 78,865 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 20 சதவீதம் பேரை, அதாவது ஏறத்தாழ 16,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய மெட்டா ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, 2028-ஆம் ஆண்டிற்குள் AI உட்கட்டமைப்பிற்காக (AI Infrastructure) சுமார் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது. இந்த மிகப்பெரிய செலவை ஈடுகட்ட, ஊழியர்களுக்கான ஊதியச் செலவைக் குறைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இரண்டாவதாக, முன்னதாகப் பெரிய குழுக்களால் (Large teams) செய்யப்பட்டு வந்த வேலைகளை, தற்போது வளர்ந்து வரும் AI கருவிகளின் உதவியுடன் மிகக் குறைந்த ஆட்களைக் கொண்டு நேர்த்தியாகச் செய்து முடிக்க முடியும் என மார்க் ஜுக்கர்பெர்க் நம்புகிறார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் மெட்டாவின் ரியாலிட்டி லேப்ஸ் (Reality Labs) பிரிவில் 10% ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் இந்த 20% பணிநீக்கம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக் வல்லுநர்கள், “நிறுவனங்கள் தங்களை AI-சார்ந்த நிறுவனங்களாக மாற்றிக்கொள்ளும்போது, சாதாரணத் திறன் கொண்ட ஊழியர்களின் தேவை குறைந்து வருவது ஒரு கசப்பான உண்மை” என்கின்றனர். ஏற்கனவே அமேசான் மற்றும் பிளாக் (Block) போன்ற நிறுவனங்களும் இதே பாணியில் ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில், மெட்டாவின் இந்த அறிவிப்பு ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


