புதுடெல்லி: திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் என்பவர் தனது பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். டெல்லியில் அமைந்துள்ள பர்யவரன் வளாகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி மாயமானார். அருகில் உள்ள காவல் நிலையத்தில் மாணவி மாயமானது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது சினேகா யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய உள்ளதாக கைப்பட எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கைப்பற்றினர். மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சினேகா கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கி விட்டதாக டாக்ஸி ஓட்டுநர் கூறினார்.
சேகரித்த தகவல்களின் அடிப்படையில் யமுனை ஆற்றல் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. நிகம்போத் காட் முதல் நொய்டா வரை உள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் ஆகியோர் தேடுதல் பணியில் மும்முறமாக இறங்கினர்.
இந்நிலையில் நேற்று இரவு கீதா காலனி மேம்பாலம் அருகில் சினேகாவின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாணவி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.