நான் ஏன் உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்??  அகர்க்கருக்கு முகமது ஷமி காட்டமான பதில்!!

Mohammed Shami's sharp reply to AgarkarMohammed Shami's sharp reply to Agarkar

கொல்கத்தா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தான் புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணம், தனது உடல் தகுதி குறித்த தெளிவின்மை என்று தேர்வுக்குழுத் தலைவர் அஜித அகர்க்கர் கூறியிருந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காட்டமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அகர்க்கரின் கருத்து:

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, மூத்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அணியில் இடம்பெறவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அகர்க்கர், “ஷமியின் தற்போதைய உடல் தகுதி குறித்த எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை. அவர் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. அவருக்கு என்ன செய்ய முடியும் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் அவர் சில போட்டிகளில் விளையாட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஷமியின் பதிலடி:

இந்நிலையில், பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடத் தயாராகி வரும் முகமது ஷமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அகர்க்கரின் கருத்துக்குப் பதிலளித்தார்.

“அப்டேட் கொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு இல்லை. எனக்கு அப்டேட் கொடுப்பவர் நான் அல்ல, அவர்கள்தான் என்னிடம் கேட்க வேண்டும். எனது உடல் தகுதி குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (NCA)த் தெரியும். நான் ஃபிட்டாக இல்லை என்றால், நான் NCA-வில்தான் இருந்திருப்பேன்; ரஞ்சி கோப்பையில் விளையாட வந்திருக்க மாட்டேன்.”

“என்னால் நான்கு நாள் போட்டி (ரஞ்சி கோப்பை) விளையாட முடியும் என்றால், 50 ஓவர் போட்டியிலும் விளையாட முடியும். அணியில் யாரைத் தேர்வு செய்வது என்பது தேர்வுக்குழுவின் முடிவு. அப்டேட் யார் கொடுக்கிறார்கள், யார் கொடுக்கவில்லை என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் வேலை NCA-க்குச் செல்வது, பயிற்சி செய்வது, போட்டிகளில் விளையாடுவது மட்டுமே” என்று ஷமி வெளிப்படையாகத் தெரிவித்தார்.

உலகக் கோப்பை 2023 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது முழு உடல் தகுதியை நிரூபித்த பிறகும் அணியில் இடம்பெறாதது, தேர்வுக்குழு மற்றும் வீரர்களுக்கு இடையே உள்ள தகவல் தொடர்பு இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.


Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram