பெர்லின்: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக முதலமைச்சர் சென்றுள்ளார். அதன்படி 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக முதலீடுகளை ஈர்த்துவிடவும், தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அரசு முறை பயணமாக தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றார். ஜெர்மனி நாட்டில் விமான நிலையத்திலிருந்து ஜெர்மனி வாழ் தமிழர்கள் என அனைவராலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ் கனவு ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று டசெல்ட்ரோப் நகரில் knorr bremse, nordex corporation மற்றும் ebm-papst ஆகிய நிறுவங்களுடன் இணைந்து ரூ.3,201 கோடி முதலீடு மற்றும் சுமார் 6250 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கிட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள அந்நிறுவனங்களின் விரிவாக பணிகள் குறித்து bmw குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
Knorr bremse நிறுவனம்: தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் ரூ.2 கோடி முதலீட்டில் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ரயில்வே ஊர்கள் மற்றும் மேம்பட்ட பொறியியல் சுற்றுச்சூழல் வலுப்படுத்த உதவும்.
Nordex corporation நிறுவனம்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தற்போதைய ஆலையை விரிவுபடுத்தி ரூ. 1000 கோடி முதலீட்டில் 2500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி பசுமை தொழில்மயமாக்குதலில் தமிழகத்திற்கு பெரும் பலமாக அமையும்.
ebm-papst நிறுவனம்: சென்னையில் உள்ள உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்தி அதில் 5 ஆண்டுகளில் 21 கோடி முதலீடு செய்யப்பட்டு 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்னணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட மோட்டார்கள், ஆட்டோமோட்டிவ், தொழில்துறை பொறியியல் மற்றும் குளிர்பதனம் ஆகிய தொழில்களுக்கு வலுவாகும்.