மதுரை: மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் தேர்வுகளில் உள்ள குளறுபடிகளையும், தேர்வு நடைமுறைகளால் மாணவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் சுட்டிக்காட்டி, அவற்றை எளிதாக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் உள்ள சிக்கல்கள், தொழில்நுட்பக் கோளாறுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்தக் கடிதத்தில் அவர் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.
குறைவான மற்றும் தொலைதூர தேர்வு மையங்கள்: நெல்லை, கோவை, வேலூர் மற்றும் புதுச்சேரி போன்ற முக்கிய நகரங்களில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப் பட்டியலில் இல்லை. மதுரை, திருச்சி மற்றும் சென்னை போன்ற நகரங்களைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு ஆந்திரா போன்ற தொலைதூர மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே ஒரு தேர்வு மையம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, இது போதாது. இதனால் மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பொருத்தமற்ற நுழைவுச் சீட்டு வெளியீடு: தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு மட்டுமே நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்படுவதால், மாணவர்கள் பயண ஏற்பாடுகளைச் செய்வதில் சிரமங்களைச் சந்திக்கின்றனர்.
தொழில்நுட்பக் கோளாறுகள்: தேர்வு நடந்தபோது கணினிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள், தேர்வர்களின் மன உளைச்சலை அதிகரித்துள்ளது. பல மையங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
குறைந்த கால அவகாசம்: விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி தேதிக்குப் பிறகு, தேர்வுக்கான தேதிகளுக்கு மிகக் குறைந்த கால அவகாசமே வழங்கப்படுகிறது.
கோரிக்கைகள்:
இந்த பிரச்சனைகள் குறித்து உடனடியாக கவனம் செலுத்தி, எஸ்எஸ்சி தேர்வு நடைமுறைகளில் கீழ்க்கண்ட மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என வெங்கடேசன் தனது கடிதத்தில் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
- மாணவர்கள் எளிதில் சென்று சேரும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் போதிய எண்ணிக்கையிலான தேர்வு மையங்களை அமைக்க வேண்டும்.
- தேர்வு மையங்களை ஒதுக்குவதில் மாநில எல்லைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
- நுழைவுச் சீட்டுகளை முன்கூட்டியே வெளியிட வேண்டும்.
- தேர்வுகளை நடத்தும் நிறுவனங்களைத் தேர்வு செய்யும் முன், தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான தெளிவான வழிமுறைகளை வகுக்க வேண்டும்.
இந்தப் பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே கடந்த ஜூலை 25ஆம் தேதி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்ததையும் வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த குளறுபடிகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.