தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே பிளஸ் 2 மாணவி காணாமல் போன நிலையில், மறுநாள் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்த மாணவி வீட்டருகே சென்றபின் திரும்பாததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் போன நிலையில் போலீசில் புகார் அளித்தனர். பின்னர் அவரது உடல் காயங்களுடன் மீட்கப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வழக்கில் ஆரம்பத்தில் புகாரை உடனடியாக பதிவு செய்யாமல் மிகுந்த அலட்சியம் காட்டியதாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீணா உயர் அதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது. அங்கு பல்வேறு தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் பலரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடலுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கைக்காக காத்திருக்கப்படுகிறது.
கல்வியில் சிறந்து விளங்கிய மாணவி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் மூன்றாம் இடம் பெற்று ஊர் பெரியவரிடமிருந்து தங்க மோதிரம் பரிசாக பெற்றிருந்தார். தற்போது பிளஸ் 2 படித்து முக்கிய தேர்வுகள் எழுதி வந்த நிலையில் இந்த சம்பவம் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் அந்தப் பகுதி மக்களையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது.


