தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நிஜாம்பேட்டையில் கடந்த வாரம் நடந்த கொடூரக் கொலை சம்பவம் ஒன்று மக்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த தாரா பெஹாரா (33) என்ற பெண் தனது காதலனான விஜய்தோபா (30) உடன் கடந்த சில மாதங்களாக கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார். தாரா பெஹாராவுக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கள்ளக்காதலன் விஜய்தோபா, ஐதராபாத்தில் இந்திரம்மா காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து, தாராவுடன் “fast food” கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாரா பெஹாரா கர்ப்பமாகியதை அறிந்த விஜய்தோபா, தாராவை கருக்கலைப்பு செய்யும்படி வலியுறுத்தினார். ஆனால் தாரா அதற்கு எதிராக இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
கடந்த மாதம் 23-ஆம் தேதி அதிகாலை, இதே கோபத்தில், தாரா பெஹாராவை துணியால் கழுத்தை நெரித்துத் துடி துடிக்க கொன்றுள்ளார். அதன் பிறகு, தனது குற்றத்தை மறைக்க, பெரிய சூட்கேஸ் ஒன்றில் அவரது உடலை அடைத்து பச்சுபள்ளி-மியாபூர் சாலையோரம் உள்ள புல்வெளியில் வீசி விட்டு தப்பியோடியுள்ளார். சில காலம் கழித்து அந்த இடத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் துர்நாற்றத்தை உணர்ந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் சடலம் இருப்பது தெரியவந்தது. உடனே விசாரணையை தொடங்கிய போலீசார், சடலத்தை கைப்பற்றி சட்டப்படி ஆய்வு செய்தனர். விசாரணையில், தாரா பெஹாரா கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரது காதலனான விஜய்தோபா தான் கொலை செய்துள்ளான் என்றும் கண்டுபிடித்தனர். போலீசார் விஜய்தோபாவை பிடித்து கைது செய்தபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் விஜய்தோபா நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்த கொலை, காதலின் பெயரில் நடக்கும் கொடூரச் சம்பவங்கள் பற்றிய சமூக சிந்தனையை அதிகரித்திருக்கிறது.