திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் மர்ம விலங்கு தொடர்பான வதந்தி பரவி மக்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டின் தலையுடன் மனித உருவில் 4 விரல்கள் உள்ள உயிரினம் காட்டில் நடமாடுகிறது என்ற தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த பகுதியில் முன்னும் பின்னும் சிறுத்தைகள் நடமாடும் விஷயம் புதிதல்ல. தண்டராம்பட்டு, கீழ்வலசை உள்ளிட்ட இடங்களில் விலங்குகள் தாக்குதலால் ஆடுகள், மாடு, கன்று குட்டிகள் பலத்த இழப்பை சந்தித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
ஆனால் தற்போது பரவி வரும் மர்ம உயிரின புகைப்படங்கள் பழையவை எனவும், அவை 2017-ஆம் ஆண்டு ஒரு கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகள் மட்டுமே எனவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதனால் பீதியில் இருந்த மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், காட்டுப்பகுதியில் விலங்குகளின் தாக்குதல் உண்மைதான் என வனத்துறை அதிகாரிகள் உறுதிபட கூறுகின்றனர். குறிப்பாக சிறுத்தைகள் நடமாடும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
காட்டு விலங்குகளின் தாக்குதலைக் குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து கிராம மக்களும் வனத்துறையும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவும் எந்தவொரு புகைப்படத்தையும் உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். மர்ம விலங்கு என்று கூறி பரவும் தகவல்கள் அனைத்தையும் வதந்தியாகவே கருத வேண்டுமெனவும், ஏதேனும் சந்தேகமான சம்பவம் நடந்தால் உடனே வனத்துறையுடன் தொடர்புகொண்டு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.