சென்னை புழல் பிரிட்டானியா நகரின் ஓரத்தில் குடிசை ஒன்று இருந்தது. அங்கேயே நவீன் பொல்லினேனி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். மிக முக்கியமானது அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. ஆந்திராவைச் சேர்ந்த 37 வயது நவீன் பொல்லினேனி, சென்னையில் செயல்படும் பிரபல திருமலா பால் நிறுவனத்தில் நிதி பிரிவு கருவூல மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் 44.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிறுவனம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. நவீனை நேரடியாக கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் நவீன் மரணம் நடந்தவுடன் அவர் அவசரமாக விடுப்பில் சென்றிருப்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது. மரணம் நடந்த இடத்திற்கு நவீன் தனியாக காரில் வந்து இறங்கியதை மட்டுமே சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் தூக்குக்கொள்வதற்கான பொருட்கள் அங்கே இல்லை. அந்த குடிசையில் நாற்காலி, மேசை போன்றவை எதுவும் இல்லை. அந்த உயரத்தில் நவீன் எப்படி தூக்கு மாட்டிக் கொண்டார் என்ற கேள்வி எழுகிறது.
இதைப் பற்றி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
“கைகள் பின்னால் கட்டப்பட்ட ஒருவரால், நாற்காலியோ மேசையோ இல்லாமல் தூக்கில் தொங்குவது எப்படி சாத்தியம்? காவல் துறை வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை நடத்தியது எந்த சட்டத்தின் பேரில்?” எனக் கேள்வி எழுப்பினார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில்:
“நவீன் அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் உண்மையா? அதில் திருமலா பால் நிர்வாக அதிகாரிகள் மிரட்டியதாக சொல்லப்பட்டுள்ளது. அதைப் பற்றி காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? துணை ஆணையர் பாண்டியராஜன் அவசர விடுப்பு எடுத்தது ஏன்?”
இன்னும் அஜித் மரணம் ஈரம் காயவில்லை. இதே வேளையில் இந்த மர்ம மரணம் தமிழக காவல் துறையின் மீது மேலும் சந்தேகம் ஏற்படுத்துகிறது எனக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் காவல் துறையின் செயல்முறைகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் முதல்வர் தரப்பில் இதுவரை எந்த தெளிவான விளக்கமும் இல்லை. போலீசார் தற்போது மரணம் குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதாக மட்டுமே கூறியுள்ளனர். ஆனால் விசாரணை எப்போது முடியும்? உண்மையான காரணம் எப்போது வெளிவரும்? என்பது இன்னும் தெரியவில்லை.