சேலம் மாவட்டம் அரியானூர் அருகே சீரகாபாடி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் கைப்பேசி மற்றும் மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையைச் சேர்ந்த கௌசிக்கேஷன் (19) என்ற மாணவர், சீரகாபாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி இரவு, அவர் படித்து கொண்டிருந்தபோது கதவை திறந்தபடியே தூங்கியுள்ளார். பிறகு எழுந்தபோது, மேஜையில் வைத்திருந்த அவரது கைப்பேசி மற்றும் மடிக்கணினி காணாமல்போனது. இதைத் தொடர்ந்து அவர் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது சேலம் மணியனூரைச் சேர்ந்த ரிஷிகேஷ் (38) என்பவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று ராக்கிப்பட்டி பகுதியில் தேநீர் கடை அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த மற்றொரு நபர், தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் (37) என்பவரும் பிடிபட்டார். அவரை சோதனையிட்ட போது, அவருடைய பையில் பல கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகள் இருந்ததைக் கண்டுபிடித்த போலீசார், அவரை ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மேகநாதனும், ரிஷிகேஷும் சேர்ந்து பல இடங்களில் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை திருடியிருப்பதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 12 கைப்பேசிகள் மற்றும் 2 மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் தற்போது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.