சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படத்தின் திரையிடலுக்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என அறிவித்திருப்பதால், திரையிடலுக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘கிங்டம்’ திரைப்படம், ஈழத் தமிழர்கள் மற்றும் அவர்களது விடுதலைப் போராட்ட வரலாற்றை தவறாகச் சித்தரிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தப் படத்தில், ஈழத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை ஒடுக்குபவர்களாகக் காட்டப்பட்டிருப்பதாகவும், இது வரலாற்றைத் திரித்து கூறும் செயல் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை தவறாகச் சித்தரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால், திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டங்கள் நடத்துவோம்” என சீமான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
நாம் தமிழர் கட்சியின் இந்த எச்சரிக்கையால், திரைப்படம் வெளியிடும் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், ‘கிங்டம்’ திரைப்படத்தை திரையிடுவதில் நாம் தமிழர் கட்சியினர் தலையிடத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதைத் தடுக்கவும், அமைதியான முறையில் திரைப்படத் திரையிடல் நடைபெறுவதற்கும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்த விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரச்சனையின் பின்னணியில், திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.