சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்!! இளம் தாய்க்கு நேர்ந்த பரிதாபம்!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோதண்டராமபுரம் வெள்ளச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த 31 வயதான விமலா, மூன்று குழந்தைகளின் தாயார் ஆவார். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த நிலையில், சில நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற விமலா, சுமார் 20 நாட்கள் தங்கி அங்கு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் வீடு திரும்பிய அவர், மீண்டும் தையல் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கடந்த மார்ச் 16ஆம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை தொடர்ந்து மிகவும் மோசமடைந்ததால், மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக விமலா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த உறவினர்கள், சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சரியான சிகிச்சை அளிக்காததால் தான் இந்த உயிரிழப்பு நடந்தது என அவர்கள் குற்றம்சாட்டினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சுகாதார சேவைகளின் தரம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram