புதுச்சேரியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்துள்ள புதிய முடிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த தவெக, தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி நேயம் மக்கள் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த திடீர் மாற்றம் அரசியல் அரங்கில் பல்வேறு எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. தவெக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 30 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து,
உருளையன்பேட்டை
தட்டாஞ்சாவடி
இந்த இரண்டு முக்கிய தொகுதிகள் கூட்டணியில் இணைந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நேயம் மக்கள் கழகத்தின் நிறுவனர் தலைவர் G. நேரு (எ) குப்புசாமி MLA அவர்கள், மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு விஜயின் தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த முடிவு தவெக தலைவர் விஜயின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, கடந்த நாளில் விஜய் வெளியிட்ட அறிக்கையில் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுவதாக கூறியிருந்தார். அதேசமயம்,
உருளையன்பேட்டை தொகுதியில் மரிய பிரான்சிஸ்
தட்டாஞ்சாவடி தொகுதியில் எம். பன்னீர்செல்வம்
என வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், தற்போது கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்பு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி தேர்தல் அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த கட்டமாக தவெக இன்னும் கூட்டணி விரிவாக்கம் செய்யுமா என்பதையும் அரசியல் வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.


