இந்தியாவில் மீண்டும் நிபா வைரஸ் (Nipah Virus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பராசத் (Barasat) பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 25 வயதுடைய இரண்டு செவிலியர்களுக்கு (ஒரு ஆண், ஒரு பெண்) நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் இவர்களுக்குக் காய்ச்சல் மற்றும் நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நிபா தொற்று இருப்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட செவிலியர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 196 பேர் உடனடியாக அடையாளம் காணப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் நிம்மதி அளிக்கும் விஷயம் என்னவென்றால், இதுவரை கண்காணிப்பில் உள்ள 196 பேருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை (Asymptomatic) மற்றும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என்றே முடிவு வந்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு வங்கத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த நிபா பரவலைத் தடுத்து நிறுத்த மத்திய மற்றும் மாநில அரசு சுகாதார நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவில் நிபா வைரஸ் பரவும் அபாயம் தற்போது தேசிய அளவில் குறைவாகவே (Low Risk) உள்ளது. எனவே, இப்போதைக்குப் பயணக் கட்டுப்பாடுகளோ அல்லது வர்த்தகக் கட்டுப்பாடுகளோ விதிக்கத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட செவிலியர்களில் ஒருவர் குணமடைந்து வரும் நிலையில், மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் உள்ளார். வௌவால்கள் கடித்த பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


