இங்கிலாந்து: லார்ட்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்-ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி, இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சுக்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த ஆலோசனைகளே காரணம் என்று தெரிவித்துள்ளார். தனது முதல் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன், கம்மின்ஸிடம் பெற்ற ஆலோசனைகள் தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், நிதீஷ் குமார் ரெட்டி தனது அறிமுகப் போட்டியில் அசத்தினார். பென் டக்கெட் மற்றும் சாக் கிராலி ஆகிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களை அடுத்தடுத்து அவுட்டாக்கி, இந்திய அணிக்குத் தேவையான ஆரம்ப விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 46 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய பந்துவீச்சாளர்களில் சிறந்த புள்ளிவிவரங்களைப் பதிவு செய்தார்.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ் குமார் ரெட்டி, “ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, நான் எனது பந்துவீச்சையும், அதன் நிலைத்தன்மையையும் மேம்படுத்த வேண்டும் என்று உணர்ந்தேன். இது எனது முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் என்பதால், ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே பந்துவீச்சில் என்ன வித்தியாசம் என்று எனது கேப்டன் பேட் கம்மின்ஸிடம் கேட்டேன். அதற்கு அவர், பெரிய மாற்றங்கள் இருக்காது, ஆனால் வானிலையின் நிலைமைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும், உங்கள் இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார்” எனத் தெரிவித்தார்.
நான் எனது பந்துவீச்சில் நிலைத்தன்மை (consistency) மீது அதிக கவனம் செலுத்தி வருகிறேன். இருபுறமும் ஸ்விங் செய்ய முடிவதால், அனைத்துப் பகுதிகளிலும் சீராக பந்துவீசுவதே எனது நோக்கம். கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக எனது பந்துவீச்சை மேம்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன்” என்று நிதீஷ் குமார் ரெட்டி கூறினார்.