இன்று இளைய தலைமுறையினர் கடைக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் தேவையானவை அனைத்தையும் வாங்குவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால், சீனாவின் ஜியாடிங் மாவட்டத்தை சேர்ந்த 66 வயது வாங் என்ற மூதாட்டி ஆன்லைன் ஷாப்பிங் மூலம் எல்லோரையும் வியக்க வைக்கும் வகையில் சாதனை படைத்துள்ளார்.
தனியாக வாழும் வாங், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகர்பகுதியில் இருந்த தனது பிளாட்டை விற்றுப் புறநகர் பகுதியில் வீட்டை வாங்கி, அதில் தனியாக வசிக்கத் தொடங்கினார். தனிமையை போக்கவும், பொழுதை கழிக்கவும் ஆன்லைன் ஷாப்பிங்கை அவர் வழக்கமாக்கி விட்டார். ஓர் ஆண்டில் மட்டும் ரூ.2.4 கோடிக்கு மேல் பொருட்கள் வாங்கி, வீடு முழுவதும் திறக்கப்படாத பொட்டலங்களால் நிரம்பி கிடக்கிறது. வாங் வீட்டில் நடக்கவும், தூங்கவும் இடமில்லாமல் ஆன்லைன் பொருட்கள் அடுக்கிக் கிடக்கின்றன. இடமில்லை என்பதால் அவர் மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு, வாங்கிய பொருட்களை அங்கே குவித்து வைத்திருக்கிறார். இது அண்டை வீட்டாருக்கு மிகுந்த தொந்தரவாக இருக்கிறது. பூச்சிகள் பெருகி, சில பொருட்களில் இருந்து துர்நாற்றம் வரும் என அவர்கள் புகார் கூறுகிறார்கள். இந்த விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வாங் பற்றிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இது ஊடகங்கள், மனநல நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடம் கவலையை எழுப்பியுள்ளது. இவ்வளவு பெரிய அளவில் வாங்கும் பாட்டியின் காரணம் மிக வித்தியாசமானது. வாங் கூறும்போது, “நான் பணக்காரி என்று தெரிந்தால் நண்பர்களும் உறவினர்களும் பணம் கேட்பார்கள். அந்த காரணத்துக்காகவே என் எல்லா பணத்தையும் ஷாப்பிங்கில் செலவழிக்க முடிவு செய்தேன்.
வீடு முழுவதும் பொருட்கள் குவிந்திருப்பதால் யாரும் என்னிடம் கடன் கேட்க விரும்ப மாட்டார்கள்,” என்று தெரிவித்துள்ளார். அவரது ஷாப்பிங் பட்டியலில் தங்க நகைகள், சுகாதார உபகரணங்கள், அழகு சாதனங்கள் என்று பல்வேறு வகையான பொருட்கள் இடம் பெற்றுள்ளன. வாங் கடந்த ஆண்டு மே மாதம் வீட்டை சுத்தம் செய்து பழைய பொட்டலங்களை வெளியேற்றினாலும், புதிய பொட்டலங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஷாங்காயைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஷி யான்ஃபெங் கூறுவதாவது, “இந்த மாதிரியான அதீத பதுக்கல் பிரச்சினைகள் வயதானவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. தனிமையும் மன அழுத்தமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதற்கான நீண்டகால சிகிச்சை தேவைப்படுகிறது,” என்றார். இந்த சம்பவம் சீனாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வயதானவர்களின் மனநல பிரச்சினைகள் மற்றும் சமூகத் தனிமையைப் பற்றிய ஒரு முக்கியத்துவமான கேள்வியை எழுப்புகிறது.