பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் இயக்குனர் ஹரிஷ் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப் படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரம் முன்னதாகவே, அதாவது மார்ச் 19-ஆம் தேதியே (19-03-2026) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகவிருந்த ‘டாக்ஸிக்’ திரைப்படம் தள்ளிப்போனதை அடுத்து, அந்த தேதியை ‘உஸ்தாத் பகத் சிங்’ குழுவினர் லாக் செய்துள்ளனர்.
இந்தப் படத்தில் பவன் கல்யாண் ஒரு அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ‘கப்பர் சிங்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இந்த காம்போ இணைந்திருப்பதால், வியாபார ரீதியாகவும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களையும், எஸ். தமன் பின்னணி இசையையும் கவனித்து வருகின்றனர்.
உகாதி மற்றும் ரம்ஜான் விடுமுறை நாட்களைக் குறிவைத்து படம் முன்கூட்டியே ரிலீஸ் செய்யப்படுவதால், பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவன் கல்யாண் ரசிகர்கள் இப்போதே மார்ச் 19-ஆம் தேதியைக் கொண்டாடத் தயாராகிவிட்டனர்.


