ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஒருவர் EPFO கணக்கில் ஏற்பட்ட மோசடியில் ரூ.1.4 கோடி வரை தனது வாழ்நாள் சேமிப்பை இழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 73 வயது ஓய்வூதியர் ஒருவர் கடந்த ஆண்டு மே மாதத்தில் ஆரம்பமான ஒரு தொலைபேசி அழைப்பால் இந்த மோசடிக்கு இரையாகியுள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பில் தன்னை ‘அலோக் மேத்தா’ என அறிமுகப்படுத்திய நபர், தன்னை டெல்லி EPFO அலுவலக அதிகாரி என்று கூறியுள்ளார். அவரது EPF கணக்கில் ரூ.63 லட்சம் வரை சிக்கியுள்ளதாகவும், அதை விடுவிக்க முதல் கட்டணமாக ரூ.7,230 செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர் பணம் அனுப்பிய பின், அவருக்கு வாட்ஸ்அப்பில் அரசு முத்திரையுடன் கூடிய போலியான ஆவணங்கள் அனுப்பப்பட்டன. அவற்றை நம்பிய அவர் தொடர்ந்து கட்டணம் செலுத்தியுள்ளார். வரி கட்டணங்கள், சரிபார்ப்பு கட்டணங்கள் என பெயரை மாற்றி மாற்றி அவரிடம் பணம் கேட்டுள்ளனர். பத்து மாதங்களுக்குள், அவர் முழுமையாக ரூ.1.4 கோடி வரை அனுப்பியுள்ளார்.
இதில் முடிந்துவிடவில்லை. மார்ச் 2024ல் ‘மஹி சர்மா’ என அறிமுகமான ஒரு பெண், தன்னை மும்பை சிபிஐ அலுவலகத்தில் இருந்து அழைத்ததாகக் கூறி, ‘அலோக் மேத்தா கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று கூறி புதிய மோசடியைத் தொடங்கினார். இப்போது வழக்கை சிபிஐ விசாரிக்கிறது என்றும், அவரிடம் விசாரணை கட்டணமாக பணம் கேட்டுள்ளனர். அந்த பணமும் அனுப்பிவிட்டார். அந்தப் பணம் தொடர்பான காசோலை வங்கியில் சமர்ப்பித்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. உடனே பாதிக்கப்பட்டவர் மே 28, 2025 அன்று டெல்லி மேற்கு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
EPFO மோசடியை தடுப்பது எப்படி?
EPFO எந்தத் தகவலும் வாட்ஸ்அப்பில் அனுப்புவதில்லை – அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.
எந்த அரசு அதிகாரியிடமும் நேரடியாக பணம் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. சந்தேகம் இருந்தால் உடனடியாக 1930 அழைக்கவும் அல்லது cybercrime.gov.in இல் புகார் செய்யவும். EPFO தொடர்பான உதவி அல்லது விசாரணைக்கு EPFO உதவி எண்ணை (செய்து) தொடர்பு கொள்ளவும்.





