தமிழகத்தில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால், பெட்ரோல் பங்குகளில் வரலாறு காணாத கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்திப் பலர் கேன்களிலும், பேரல்களிலும் எரிபொருளைப் பதுக்க முயற்சிப்பதால், பங்க் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சுமார் 7,000 பெட்ரோல் பங்குகளுக்கு உரியப் பாதுகாப்பு வழங்கக் கோரி, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் மாநில டிஜிபி-யிடம் அவசரக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விதிகளைச் சுட்டிக்காட்டி ஊழியர்கள் கேன்களில் எரிபொருள் வழங்க மறுக்கும்போது, ஆத்திரமடைந்த சிலர் ஊழியர்களை மிரட்டுவதும், தகாத வார்த்தைகளால் பேசுவதும் தொடர்கதையாகி வருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “பல இடங்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று சட்டம்-ஒழுங்கு நெருக்கடியாக மாறி வருகிறது. இதைச் சாதாரண ஊழியர்களால் தனியாகச் சமாளிக்க முடியாது.
எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பே அனைத்துப் பெட்ரோல் பங்குகளிலும் போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்திருந்தாலும், பொதுமக்களின் பதற்றம் குறையாத நிலையில், காவல்துறையின் தலையீடு அவசியமாகிறது. மாவட்ட வாரியாகப் பங்குகளில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


