கோவையில் பி எஸ் ஜி கல்லூரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதற்கான தீர்வினை ஒரு புத்தகத்தின் மூலம் வெளியிட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிகள் குறித்து பிஎஸ்ஜி கல்லூரி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுதா ராமலிங்கம் மற்றும் டாக்டர் மற்றும் ஆராய்ச்சியாளர் செல்வகுமார் ஆகியோர் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் பேசுகையில், கோவை வேடம்பட்டி பகுதியில் உள்ள 350 விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் ரத்தம் மாதிரிகள் கலெக்ட் செய்யப்பட்டிருந்தது. அவர்களின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து தன்மை காணப்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்கு சர்க்கரை நோய்க்கான தாக்கமும் அதிகரித்து காணப்பட்டுள்ளது. மேலும் பூச்சிக்கொல்லியின் வீரியத்தால் அவர்களுக்கு புற்று நோய் அபாயமும் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இது குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ஆய்வு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். மனிதர்களின் ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதை ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஆய்வு முடிவு வெளியிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து குழந்தைகளின் ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் கடந்த மூன்று மாதங்களாக ஈடுபட்டு உள்ளோம். இதற்காக குழந்தைகளின் ரத்தத்தை தனியாக எடுக்காமல் அவர்களுக்கு உணவை வழங்கும் நஞ்சு கொடியை கலெக்ட் செய்து அதை ரத்த பரிசோதனை ஆய்வில் உட்படுத்தி வருகிறோம். இதற்காக பிரத்யேகமாக எஸ் இ எம் எஸ் என்ற கருவியை நாங்கள் உபயோகிக்கிறோம். இதுவரை ஆராய்ந்ததில் நஞ்சுக்கொடியில் அதிகமான நுண் துகள்கள் காணப்படுகின்றன. ஆய்வு தொடக்க நிலையில் உள்ளதால், இது குறித்த முழு விவரம் தற்போது சொல்ல இயலாது. மேலும் இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் விரைவில் ஆராய்ந்து ஆய்வு புத்தகம் வெளியிடுவோம் என்று குறிப்பிட்டு இருந்தனர். மேலும் கர்ப்பிணிகளை அவர்கள் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்லுமாறும், உணவு உட்கொள்ளும் போது மிக கவனமாக பிளாஸ்டிக் கற்ற வெளி உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளுமாறும் பரிந்துரைத்துள்ளனர்.