பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இங்கிலாந்தில் ஜூலை 23, 24 மற்றும் மாலத்தீவில் ஜூலை 25, 26-ஆம் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாலத்தீவின் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார். 26-ம் தேதி இரவு அவர் நேரடியாக தூத்துக்குடி வருகிறார். முன்னதாக 27 மற்றும் 28-ம் தேதிகளில் தமிழகத்தில் பயணம் செய்வதாக இருந்த நிலையில், தற்போது அவர் ஒரு நாள் முன்னதாகவே வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமருக்கு பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.380 கோடியில் சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விமானத்தின் ஓடும் பாதை 3,000 மீட்டராக நீட்டிக்கப்பட்டுள்ளதால், இனிமேல் இரவு நேர விமான சேவையும் தொடங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பல முடிவுற்ற திட்டங்களை பிரதமர் நாட்டிற்காக தொடங்கி வைக்க உள்ளார். இதில் ரூ.2,357 கோடி மதிப்பில் சேத்தியாதோப்பு–சோழபுரம் நான்கு வழிச் சாலை, ரூ.200 கோடி மதிப்பில் தூத்துக்குடி துறைமுக சாலை, ரூ.99 கோடியில் மதுரை–போடிநாயக்கனூர் மின் மயமான ரயில் பாதை, ரூ.650 கோடியில் நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை இரட்டையாக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவை அடங்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.548 கோடியில் மின் பரிமாற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மொத்தமாக ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. விழா முடிந்ததும் மோடி இரவு 9.30 மணிக்கு திருச்சிக்கு புறப்படுகிறார். 27-ம் தேதி காலை அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு செல்லும் பிரதமர், அங்குள்ள சிவாலயத்தில் ராஜேந்திர சோழனின் திருவாதிரை பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார். விழாவிற்கு முன்பு 700 மீட்டர் தூரத்திற்கு “ரோடு ஷோ” நடத்த உள்ளார். பின்னர் பாஜக நிர்வாகிகளை சந்தித்து, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டு, இசையமைப்பாளர் இளையராஜாவின் “திருவாசகம்” நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.