தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், நரேந்திர மோடி சென்னை வருகை குறித்த முக்கிய தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, வரும் ஏப்ரல் 4, 2026 அன்று பிரதமர் மோடி சென்னை வந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாதக, தவெக உள்ளிட்ட பல கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளதால் இந்த தேர்தல் பலமுனை போட்டியாக மாறியுள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. முக்கிய தலைவர்கள் நேரடியாக களமிறங்கி பிரச்சாரம் செய்வதால், தேர்தல் பரபரப்பு மேலும் அதிகரித்து வருகிறது.
இந்த தேர்தலில், பாஜக அதிமுக கூட்டணியுடன் களம் காண உள்ளது. கூட்டணி அடிப்படையில் பாஜக சுமார் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக தனது இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதால், இரு கட்சிகளும் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிரதமர் மோடி ஏப்ரல் இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தின் பிற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமரின் இந்த வருகை உறுதியாகும் பட்சத்தில், அதிமுக, பாஜக கூட்டணிக்கு தேர்தல் களத்தில் கூடுதல் பலம் கிடைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.




