தமிழ்நாடு: தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தரவிருக்கிறார். தூத்துக்குடியில் விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார். பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இன்று இரவு தூத்துக்குடியில் இருந்து விமான மூலம் திருச்சி வந்து கார் மூலம் திருச்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கோட்ரியாட் மாரியாட் நட்சத்திர விடுதியில் தங்க உள்ளார்.
முதல் முறையாக பிரதமர் மோடி திருச்சி நட்சத்திர விடுதியில் தங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை காலை நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்டு மாநகராட்சி அலுவலகம், ஒத்தக்கடை, சுப்பிரமணியபுரம் மற்றும் மத்திய சிறைச்சாலை பகுதி சாலை வழியாக விமான நிலையம் சென்றடைவார்.
நாளை 11 மணி அளவில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளையொட்டி ஆடி திருவாதிரை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கு கொள்கிறார். பின் பிரகதீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி தங்கும் நட்சத்திர விடுதி சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு நட்சத்திர விடுதி சாலை முழுவதும் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு சோதனைக்கு பிறகு பொதுமக்களை அனுமதிக்கின்றனர். திருச்சி மாநகர் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நட்சத்திர விடுதி வரை எஸ்பிஜி குழுவினர் தமிழக போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் ஒருங்கிணைந்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். இன்று முதல் நாளை வரை ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் சரவணன் தடை விதித்துள்ளார். மீறினால் உரிய நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு புறப்பட்டு சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட்ட பின் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின் அனுமதிக்கப்படுகின்றனர். மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆகியோர் விமான நிலையம் முழுவதும் சோதனை செய்து பாதுகாப்பினை உறுதி செய்கின்றன.