வாஷிங்டன்: தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனை ராணுவ படை மோதலில் இறங்கியுள்ளது. இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் இதுவரை இருதரப்பிலும் சேர்த்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலின் காரணமாக எல்லை மாகாணங்களான தாய்லாந்தின் சுரின் பகுதி மற்றும் கம்போடியாவின் ஒடன் மின்ச்சி பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
எல்லை பிரச்சனை குறித்து இரு நாட்டு தலைவர்களிடமும் தனித்தனியாக பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். பேச்சுவார்த்தையில் மோதல் தொடர்ந்தால் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் நிறுத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
இதனால் மோதல் குறித்து விவாதிக்க இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். இந்த பேச்சு வார்த்தையானது மலேசியாவின் புட்ரஜயா நகரில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இதில் கம்போடியா பிரதமர் ஹன் மானெட் மற்றும் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சா ஆகிய இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் எந்தவித நிபந்தனையும் இன்றி தாக்குதல் முடிவுக்கு வந்ததாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்க அதிபரின் ஈடுபாட்டிற்கு பிறகு இரு நாடுகளின் எல்லை பிரச்சனை முடிவுக்கு வந்ததாகவும், இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.
எல்லை பிரச்சனையால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளோம். வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என வர்த்தக குழுவிற்கு அறிவுறுத்தி உள்ளேன். கடந்த ஆறு மாதங்களில் பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து உள்ளேன் அமைதியின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.