அரசு பள்ளிகளுக்கான மின் வேலைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாக பொதுப்பணித்துறை முதுநிலை வரைவு தொழில் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜாரிகொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் அரசு பள்ளிகளில் மின் பொருட்கள் மற்றும் அமைப்புகளை புதுப்பிக்கும் மற்றும் பராமரிக்கும் ஒப்பந்தங்களை தொடர்ந்து செய்து வந்தார். அதேபோல, சமீபத்தில் புதிய ஒப்பந்தத்திற்கும் அவர் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில், பொதுப்பணித்துறை முதுநிலை வரைவு தொழில் அலுவலர் ரவி (55), அந்த ஒப்பந்தத்தை சண்முகத்திற்கு வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டு ஒதுக்கீட்டை உறுதிசெய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அதிகாரியின் இந்த செயலில் அதிர்ச்சி அடைந்த சண்முகம் உடனே சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கையில் இறங்கி, சண்முகம் வழிகாட்டுதலின்படி மற்றொரு கான்ட்ராக்டரான பிரகாசிடம் (45) ரூ.1 லட்சத்தை ஒப்படைத்தார். பிரகாஷ் அந்த தொகையை அதிகாரி ரவியிடம் நேரில் சென்று கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் ஒரே நேரத்தில் கைது செய்தனர். அதன்பின் அதிகாரி ரவி மற்றும் கான்ட்ராக்டர் பிரகாஷ் இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக பொதுப்பணித்துறையிலும் கான்ட்ராக்டர்கள் மத்திலும் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அதிகாரிகள் எவ்வளவு பெரிய அளவிலான லஞ்சங்களை கேட்டு வருகிறார்கள் என்பதையும், அவற்றை விரைவில் கண்டுபிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் எவ்வாறு தீவிரமாக செயல்படுகிறார்கள் என்பதும் இந்த சம்பவத்தால் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.