மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் இந்தியாவில் நிலவி வரும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஆகியவற்றின் தாக்கம், இப்போது யூனியன் பிரதேசமான புதுச்சேரியையும் விட்டு வைக்கவில்லை. புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படப் போவதாகச் சமூக வலைதளங்களில் பரவிய தகவலால், இன்று அதிகாலை முதலே நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக மிஷன் வீதி, மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலை மற்றும் லாஸ்பேட்டை பகுதிகளில் உள்ள பங்க்குகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் கிலோமீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன.
“ஒருவேளை விநியோகம் நிறுத்தப்பட்டால் வேலைக்குச் செல்லவும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் வாகனம் ஓட்ட முடியாது” என்ற அச்சத்தில், பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் எரிபொருள் டேங்குகளை முழுமையாக (Full Tank) நிரப்பிச் செல்கின்றனர். இதுமட்டுமின்றி, பலர் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாட்டில்களிலும் பெட்ரோலை வாங்கிச் செல்கின்றனர். இதனால் பல பங்க்குகளில் எரிபொருள் இருப்பு வேகமாகத் தீர்ந்து வருவதால், போக்குவரத்து நெரிசலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
புதுச்சேரி அரசு தரப்பில், “மாநிலத்தில் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது, பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பிப் பதற்றமடைய வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அண்டை மாநிலமான தமிழகத்தில் நிலவும் அதே பதற்றம் இங்கும் தொற்றிக் கொண்டதால், பங்க் ஊழியர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். போர் பதற்றம் தணியும் வரை இந்தத் தட்டுப்பாடு அச்சம் நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமாகிறது.


